Friday, December 24, 2010

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய - TPV9

இத்திருப்பாவைப் பாசுர மீள் இடுகையில், பல செய்திகளையும், படங்களையும் சேர்த்திருக்கிறேன்.

திருப்பாவை ஒன்பதாம் பாடல்


மாமன் மகளை எழுப்பிட, கண்ணன் புகழைப் பாடுவோம்!

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய்!


பொருளுரை:
மாசற்ற வைர வைடூரியங்கள் பதிக்கப்பெற்ற மாடத்தில், நாற்புறமும் தீபங்கள் ஒளிர, நறுமணப்புகை எங்கும் வீச, மென்மையான படுக்கையில் உறங்கும் மாமன் மகளே! மணிகள் பதித்த கதவினை திறப்பாயாக! மாமிமாரே! துயிலுறும் உங்கள் மகளை எழுப்ப மாட்டீர்களோ?

அவள் என்ன ஊமையோ, செவிடோ , (கர்வத்தால் உண்டான) சோம்பல் மிக்கவளோ? அல்லது, எழுந்திராதபடி காவலில் வைக்கப்படுள்ளாளோ? ஏதேனும் மந்திரத்திற்கு வயப்பட்டுள்ளாளோ? இப்பெண்ணை எழுப்பி பாவை நோன்பிற்கு கூட்டிச் செல்வதற்கு "வியத்தகு கல்யாண குணங்களை உடையவனே, வைகுண்டத்தில் உறைபவனே, திருமகளின் நாயகனே" என்றெல்லாம் எம்பெருமானின் ஆயிரம் நாமங்களை உரக்கச் சொல்வோம்!

தூமணிமாடத்து-On the gem-studded balcony,
சுற்றும் விளக்கெரிய-Surrounded by long stemmed lamps,
தூபம் கமழ-With incense burning,
துயிலணை மேல்-(You, who lie) on the soft mattress,
கண் வளரும்-Eyes closed in sleep,
மாமான் மகளே!-My uncle’s daughter!
மணிக்கதவம் தாள் திறவாய்!-Open your jeweled doors!
மாமீர்! அவளை எழுப்பீரோ!-Aunt! Won’t you wake her up?
உன் மகள் தான் ஊமையோ?- Is your daughter dumb,
அன்றிச் செவிடோ? அனந்தலோ?-Perhaps deaf, or lost her senses?
ஏமப் பெருந்துயில்-Why this great sleep?
மந்திரப்பட்டாளோ?-Is she under a magical spell?
மாமாயன், மாதவன், வைகுந்தன்-Supreme Enchanter! Lakshmi’s Lord! Supreme being!
என்றென்று நாமம் பலவும்-And such-like names
நவின்று ஏலோரெம்பாவாய்!- We have invoked! Oh! My Maidens!

பாசுரக் குறிப்புகள்:

உறங்குபவள் பெரும்பாகவதை என்பதால் தான் ஆண்டாள் அவளது தூங்கும் நிலையைக் கூட "கண் வளரும்" என்று பெருமையாகக் குறிப்பிடுகிறாள்! அமைதியான யோகத்துயிலது. தூமணி மாடமும், சுற்றும் விளக்கும், தூபமும், துயிலணையும் ஒரு செல்வச்சூழலை சொல்கிறது அல்லவா? அத்தகைய செல்வமே, எது சத்தியம், சாஸ்வதம் என்பதை மறந்து விடச் செய்கிறது! அந்த நிலையை "ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ" என்று ஆண்டாள் நயம்பட பாடுகிறாள்!

"தூமணி மாடத்து" என்று தொடங்கும் இப்பாசுரம் போலவே, நம்மாழ்வார் அருளிய பத்து தொலைவில்லிமங்கலப்(ஒரு வைணவ திவ்யதேசம்) பாசுரங்களில் முதல் பாசுரம், "துவளில் மாமணி மாடமோங்கு" என்று தொடங்குவதை குறிப்பிட வேண்டும். அந்த பத்தும் தொலைவில்லிமங்கலப் பெருமானிடம் மையல் கொண்ட பராங்குச நாயகியைப் பற்றிய திருப்பாசுரங்கள். இவை இரண்டையும் ஒப்பு நோக்கி, வைணவ ஆச்சார்யர் அருமையான வியாக்கினங்களை வழங்கியிருக்கிறார்கள்.
பரமனானவன் தேவர்கள் தன் திருவடியில் சமர்ப்பித்த ரத்தினங்களில், கசடானவற்றைத் தூய்மைப்படுத்தி
"துவளில் மாமணிகளாக" தான் வைத்துக் கொள்வானாம்! தூய்மையால் பிரகாசிக்கின்ற ரத்தினங்கள் ஆண்டாள் குறிப்பிடும் இந்த பாகவதையின் "தூமணி மாடத்தை" அலங்கரித்தனவாம்!

நாயகிபாவம் (கண்ணனின் பரிபூர்ண அன்புக்கு/அருளுக்கு பாத்திரமான உணர்வு!) இங்கு அழகாக வெளிப்படுகிறது! உறங்கும் பாகவதையின் தாயாரை, துணைக்கு அழைப்பதால் (மாமீர் அவளை எழுப்பீரோ?), மோட்ச புருஷார்த்தத்தை அடைய புருஷகாரத்துடன் (பாகவதையின் தொடர்பு) ஆச்சார்ய அனுக்ரகமும் அவசியம் என்பது வலியுறுத்தப்படுகிறது!

ஒரு ஆண்மகனாய் இருந்து நாயகிபாவத்தைப் பெறுவது கடினம்! ஆண்டாள் என்ற பெண்ணுக்கு (ஏன் மற்ற கோபியருக்கும்!) அது மிக எளிதில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாய் இருந்ததில் அதிசயம் ஏதுமில்லை!


இந்த நாயகிபாவம் சில நேரங்களில் செல்லக் கோபத்தையும் ஏற்படுத்தும் என்பதற்கு, திருமங்கையாழ்வாரே எடுத்துக்காட்டாக இருக்கிறார்! ஒரு சமயம், பரமனைச் சந்திக்கும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கலியனார் திருநின்றவூர் பெருமானை தரிசிக்கச் சென்றபோது, கோயில் பட்டர் சன்னதியின் திரையை மூடி விட்டார். ஆழ்வாருக்கு கோபம் ஏற்பட்டு, "திருநின்றவூரில் நீரே வாழ்ந்து போம்" என்று சொல்லி விட்டாராம்!

நான்கு வகை புருஷார்த்தங்களில் (தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்), மோட்சமே உயரியது ஆக இருப்பினும், ஒரு சமயம் ராமானுஜரிடம், "நான்கில் எது உண்மையான புருஷார்த்தம்?" என்று கேள்வி வைக்கப்பட்டபோது, சன்யாசியான அவர் கூறிய பதில் ஆச்சரியபடுத்தும் வகையில் உள்ளது! உடையவர், "அந்த காமம் எல்லாம் கண்ணனுக்கே"(கண்ணன் மேலான காமமே (பேரன்பு என்று பொருள்) உண்மையான புருஷார்த்தம்") என்றாராம்!

துயிலில் இருக்கும் அந்த பாகவதையை எழுப்ப அவள் தாயாரை துணைக்கழைத்தும், அவளை சிறிது கடிந்து பேசியும் அவள் காதில் எதுவும் விழாத காரணத்தினாலே, கோதை நாச்சியார் பரமனின் திருநாமங்களைச் சொன்னாலாவது எழுந்திருப்பாளோ என்று "மாமாயன் மாதவன் வைகுந்தனென்று" பாடுவதாகக் கொள்வதிலும் ஒரு நயம் இருக்கிறது இல்லையா! அப்பாகவதையும் துயில் விட்டு எழுந்தாள் என்று சொல்லவும் வேண்டுமோ!

மாமாயனின் மாயத்தை யாரால் புரிந்து கொள்ள முடியும்? நம்மாழ்வாரே,
"அமைவுடை நாரணன் மாயையை அறிவார் யாரே?" என்று அருளியிருப்பதை இங்கு நினைவு கூர வேண்டும்.

வராக அவதாரத்தின்போது, பெருங்கடலானது பரமனின் கணுக்காலை மட்டுமே நனைத்தது, கிருஷ்ணாவதாரத்திலோ யசோதாவால் கண்ணனை கையளவு நீரிலே குளிப்பாட்ட முடிந்தது! அவனது மாயை அத்தகையது. "மாமேகம் சரணம் வ்ரஜ" என்று எல்லோரையும் தன் திருவடிகளைப் பணியச் சொன்ன கண்ணபிரானே, யசோதா தன்னைக் குளிப்பாட்டும்போது அவளது இரு கால்களையும் இறுகப் பற்றிக் கொள்வானாம் :-)

"மாமாயன் .... நாமம் பலவும் நவின்றேலோ" என்பதையும் கவனிக்க வேண்டும். அதாவது, மாமாயன் மாதவன் வைகுந்தன் என்ற மூன்று நாமங்களை அனுஷ்டிப்பது, அவனது பல (1008) திருநாமங்களைப் பாடுவதற்கு நிகரானது என்ற செய்தியை ஆண்டாள் நமக்கருளுகிறாள்! மேலும், அவன் மாமாயன்!! ஆயர்ப்பாடியில் கண்ணனாக இருந்தாலும், திருமகளின் கணவனான திருப்பாற்கடல் மாதவனும் அவனே, பரமபதத்தில் வீற்றிருக்கும் வைகுந்தனும் அவனே! ஆக, பூரண சரணாகதியைக் கைக் கொண்டு நாம் அடைய வேண்டிய இடம் அந்த வைகுந்தமே! அதனால் தான் "வைகுந்தனை" கடைசியாக வைத்தாள் ஆண்டாள்!

பாசுரச் சிறப்பு:
இப்பாசுரமும் உள்ளர்த்ததில் ஆச்சார்யனை கொண்டாடுவதாகவே கருதப்படுகிறது.

எட்டாவது பாசுரத்தில் ஆண்டாளும் அவளது தோழிகளும் துயிலெழுப்பிய பெண், கண்ணனுக்கு உகந்தவள் மட்டுமே, ஆனால் (9வது) இப்பாசுரத்தில் எழுப்பப்படும் பெண் ஞானமிக்கவள்! உறங்கும் பெண்ணின் சிறப்பு கருதியே, ஆண்டாள் அவளை "மாமான் மகளே" என்று சொந்தம் கொண்டாடுகிறாள் என்பதும் குறிப்பிடத்தக்கது! அதோடு, மாமன் என்பவர் சதாச்சார்யன் (தாய் தந்தையரை விட உயர்ந்த) ஸ்தானத்தில் இருப்பவராகிறார். அவரது மகள் எனும்போது, உறங்கும் அப்பெண் ஆச்சார்யனின் அந்தரங்க சீடராகிறார்!

'மாமான் மகளே' என்றழைத்ததற்கு, திருவாய்ப்பாடியில் ஒரு நெருங்கிய உறவு தனக்கு வேண்டும் என்று ஆண்டாள் விரும்பியதே என்ற சுவையான காரணமும் உண்டு :)

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழ துயிலணை மேல் கண் வளரும் -
இதை விட அருமையாக ஒருவர் உறங்குவதை கவிநயத்துடன் (கோதை நாச்சியாரைத் தவிர!) யாராலும் சொல்ல இயலாது. பகவத் அனுபவத்தில் திளைத்த, ஞானமிக்க ஒருத்தியின் துயில் கூட கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகி விடுகிறது, ஆண்டாளுக்கு :)

அப்பெண் ஏன் இப்படியொரு உறக்கத்தில் ஆழ்ந்து இருக்கிறாள் ? கண்ணனிடத்தில் அனைத்துக் கவலைகளையும் ஒப்படைத்து விட்டதால், நிச்சிந்தையாக அவளால் உறங்க முடிகிறது!
அனன்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜனா பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகஷேமம் வஹாம்யஹம்


என்று பகவானே அருளியிருக்கிறான் அல்லவா ?

அது போலவே, உறங்கும் பெண்ணின் தாயிடம் சொல்லியும், அப்பெண் எழுத்திராததால், ஆண்டாள் மிதமான கோபத்துடன், "உன் மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?" என்கிறாள்! உடனே, உறங்குபவளின் பகவத் விஷய ஞானமும், அவள் பக்தியும் நினைவுக்கு வர, ஆண்டாள், "ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?" என்று ஐயத்தின் பலனை (Benefit of Doubt) அப்பெண்ணுக்கே தருகிறாள்!

ஏமம் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு.
இரவு, இன்பம், உன்மத்தம், கலக்கம், களிப்பு, காவல், சேமம், திரைச்சீலை, புதையல், பொன், மயக்கம், விபூதி என்று ...


இனி, பாசுரத்தின் உள்ளுரையைப் பார்ப்போம்.

1. தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய - தூமணி மாடம் என்பது, அழிவில்லாத, ஞானத்தை உள்ளடக்கிய நான்மறையை (வேதம்) குறிப்பில் சொல்கிறது. "சுற்றும்" என்பது வேதத்தின் ஆறு அங்கங்களை (சிக்க்ஷை, கண்டம், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜோதிஷம்) குறிக்கிறது. விளக்கு என்பது வேதசாரத்தை புரிந்து கொள்ள உதவும் ஸ்மிருதி, புராண, உபநிடதங்கள் சார்ந்த ஞானத்தை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது. இப்போது உறங்குபவளின் ஞானச் சூழல் புரிகிறதல்லவா ?

ஞான தீபமாகிய "விளக்கு" என்ற பதத்தை ஆழ்வார் பாசுரங்களில் பல இடங்களில் காணலாம்.
"ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன்", "உய்த்துணர்வென்னும் ஒளி கொள் விளக்கேற்றி", "மிக்கானை மறையை விரிந்த விளக்கை"
என்று பல உதாரணங்களைக் காட்ட முடியும்.

2. தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும் - "தூபம் கமழ" என்பது ஞானம், அனுஷ்டானம் மற்றும் வைராக்கியம் என்ற மூன்று விஷயங்களை குறிப்பில் உணர்த்துவதாக அபினவ தேசிகன் கூறுவார்.

"துயிலணை மேல் கண் வளரும்" என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் (அப்பெண்ணின்) பகவத் ஞானத் தன்மையைக் குறிக்கிறது!

3. மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்! - "எளிதில் உணர இயலா பகவத் விஷயங்களை உபதேசிக்குமாறு சீடன் ஆச்சாரியனை உள்ளத் தூய்மையோடு வேண்டுகிறார்" என்பது உட்பொருள். அதாவது, ஆச்சார்யன் ஒருவரே, நமது புலன் சார் தமோ குணங்கள் மற்றும் வினைப்பயன்கள் என்ற கதவின் தாளை விலக்கி, மோட்ச சித்திக்கு வேண்டிய ஞானத்தை அருள வல்லவர் என்று கொள்ளலாம்.

4. மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? - பகவத் சேவைக்கு வேண்டி அவ்வடியவளை எழுப்ப வைணவ ஆச்சார்யர்களிடம் (மாமீர்) வேண்டுகோள் வைக்கப்படுகிறது! பகவத் ஞானத்தால் உண்டான தண்ணொளி மிகு நிலையானது (state of enlightenment), "ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?" என்பதன் உள்ளர்த்தமாம்!

"உன் மகள்" என விளிக்கப்படுவதால், அவ்வடியவள் வைணவ ஆச்சார்ய சம்பந்தம் உடையவள் என்பது புலப்படுகிறது...

5. ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? - அஷ்டாட்சர மந்திரத்தின் ஆதிக்கமே இந்த ஏமப் பெருந்துயிலுக்கு காரணம்!


சூடிக்கொடுத்த நாச்சியாரின் தந்தை பெரியாழ்வார் பாசுர வரிகளில் வரும் மயக்க நிலையை ஒத்தது இது:
பெய்யுமா முகில் போல் வண்ணா.* உன் தன் பேச்சும் செய்கையும்*
எங்களை மையலேற்றி மயக்க* உன்முகம் மாயமந்திரந்தான் கொலோ*

6. மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய் - ஆச்சார்யனை அடைந்து, உபதேசம் பெற்று பேரின்பம் தரும் பகவத் அனுபவத்தில் திளைப்போம் என்பது எளிமையான உட்பொருளாம். இது தவிர இவ்வாக்கியத்திற்கு பல உள்ளுரைகள் உள்ளன!

மாமாயன் என்பது நீர்மையையும், மாதவன் என்பது திருமகளின் நாயகன் என்பதையும், வைகுந்தன் என்பது பரத்துவத்தையும் குறிப்பன. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய சங்கதி ஒன்றுண்டு. பெரிய பிராட்டியின் சம்பந்தத்தினாலேயே, நீர்மையும், பரத்துவமும் பகவானுக்கே சித்திக்கும் என்பதை கோதை நாச்சியார், 'மாதவன்' என்பதை நடுவண் (மாமாயன், வைகுந்தன் என்ற பதங்களுக்கு இடையில்) வைத்து மிக அழகாக நிலைநாட்டி விடுகிறார் !

மாமாயன் என்ற பதத்தை பலவகையாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்:

மாமாயன் = மா + ஆயன் = ஆயர் குலத்தில் பெரியவன் / சிறந்தவன்

மாமாயன் = மா + ஆயன் = திருமகள் தொடர்பு உடைய ஆயர் குலத்தவன் (இங்கு மா என்பது திருமகளைக் குறிக்கும், மாலோலன், மாதவன் போல)

மாமாயன் = மா + ஆயன் = இல்லை + ஆயன் (இவன் மகாவிஷ்ணு, தர்மத்தை நிலை நாட்டவே ஆயர் குலத்தினில் கோபாலனாக "அவதரித்தவன்" என்று கொள்ளலாம்)

'மாமாயன்' பற்றி எப்படி மாய்ந்து மாய்ந்து சொல்ல வேண்டியிருக்கிறது பாருங்கள் :-)


திருமழிசையாழ்வார் திருப்பள்ளியெழுச்சி:

இப்பாசுரம் (முந்தைய பாசுரத்தில் துயிலெழுப்பப்பட்ட) நம்மாழ்வாருக்கு முன்னர் அவதரித்த திருமழிசை பிரானை துயிலெழுப்புவதாகச் சொல்வது ஒரு ஐதீகம்! இங்கு "மாமான் மகளே" என்ற சொல்லாடல் ஒருவித இரத்த சம்பந்தத்தைக் குறிப்பதாம்! அதெப்படி ஆண்டாளுக்கும் திருமழிசைபிரானுக்கும் ரத்த சம்பந்தமான உறவு இருக்க முடியும்?

கோதாஸ்துதி ஆண்டாளை திருமகள் அவதாரமாகத் தானே சொல்கிறது. புராணங்கள் மகாலஷ்மி (திருமகள்) பிருகு குலத்தில் அவதரித்ததாகக் கூறுகிறது! ஆண்டாள் ஒரு அந்தணரால் (விஷ்ணுசித்தர்) கண்டெடுக்கப்பட்டு தன்னை ஒரு கோபியர் குலப்பெண்ணாக வரிந்து கொண்டவர். அது போல, திருமழிசையார் ஒரு ரிஷியின் மகனாக பிருகு குலத்தில் அவதரித்து, பின்னர் ஒரு வேடனால் (பிரம்பன் குலம்) வளர்க்கப்பட்டவர். அதனால், இரத்த சம்பந்தம் உண்டு என்று கொள்வது பொருத்தமானதே.

"தூமணி மாடத்து" என்ற நாச்சியாரின் பிரயோகத்தை அவதானிக்க வேண்டும். பட்டை தீட்டப்படாத மாணிக்கக்கல் தெளிவில்லாமல் ஒரு கூட்டுக்குள் இருப்பது போல காட்சியளிக்கும். அத்தகைய மாணிக்கம் போல இருந்த எம்பெருமானை "உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே" என்று திருமழிசையாழ்வார் ஒரு சமயம் வேண்ட, பரமனும் அவருக்கு அவ்வண்ணமே காட்சியளித்தான். ஆக, "தூமணி மாடத்து" திருமழிசையாழ்வாரைக் குறிப்பதாகச் சொல்வது பொருத்தமான ஒன்றே.

"சுற்றும் விளக்கெரிய" என்ற சொற்பதம் ஞானத்தினால் உண்டான ஒளியை (தேஜஸ்) குறிப்பதாம். திருமழிசை பிரான் அவரே அருளியபடி, "சாக்கியம் கற்றோம், சமணம் கற்றோம், சங்கரனார் ஆக்கிய ஆகமநூல் அறிந்தோம்" என்று பல்வகை தத்துவ விசாரங்கள் செய்து ஞானத்தெளிவு பெற்ற பெருந்தகை என்பதால், இச்சொற்பதம் அவரை குறிப்பில் உணர்த்துவதாகச் சொல்லலாம் தானே.

தூபம் கமழ - ஆழ்ந்த ஞானம் இருந்தால் மட்டும் போதாது, அது பிரயோகத்தால் செழிக்க வேண்டும், பிறருக்கு பயன் தரவும் வேண்டும். திருமழிசை பிரான் "தூபம் கமழ"த் தான் பூவுலகில் வாழ்ந்தார்!

துயிலணை மேல் கண்வளரும் - இவ்வாழ்வார், எம்பெருமானின் கிடந்த திருக்கோலம் மீது காதல் கொண்டவர்! வாழ்வின் பெரும்பகுதியை திருக்குடந்தையிலும் திருவெஃகாவிலும் கழித்தவர். பாசுரம் ஒன்றில்,

"நாகத்தணை குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத்தணை அரங்கம் பேரன்பில்
நாகத்தணை பாற்கடல் கிடக்கும் ஆதிநெடுமால்
அணைப்பர் கருத்தன் ஆவான்"


என்று பெருமானின் கிடந்த கோல திவ்யதேசங்களைப் பட்டியலிடுகிறார்!

"துயிலணை மேல் கண்வளரும் மாமான் மகளே" என்பதில், மாமான் என்பதற்கு மஹா மஹான் என்பது உள்ளர்த்தமாம். அதாவது, "துயிலணை மேல் கண்வளரும் மாமான்" திருவெஃகாவில் பள்ளி கொண்டுள்ள "சொன்ன வண்ணம் செய்த" பெருமானே தான்! ஆழ்வார், "நீயும் உன் பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்" என்றபோதும், "நீயும் உன் பைந்நாகப்பாய் விரித்துக் கொள்" என்ற போதும் "சொன்னவண்ணம்" செய்தவனில்லையா அந்த யதோக்தகாரி!

ஆழ்வாரால் தொழப்பட்ட திருக்குடந்தை ஆராவமுதப் பெருமானும், ஆழ்வாரின்,"எழுந்திருந்து பேசு வாழிகேசனே!" என்ற சொல்லுக்குக் கட்டுப்பட்டு, பாதி கிடக்க/பாதி எழுந்தவன் இன்றும் அத்திருக்கோலத்திலேயே (உத்தான சயனம்) தான் அருள் பாலிக்கிறான்! ஆக, திருமழிசை பிரான் தந்தையான பெருமானுக்கு ஒரு "மகள்" போல நெருக்கமானவர். வைணவ ஆச்சார்யர் சிலர், திருமழிசை பிரானுக்கு வைணவத்தின் சிறப்பை உணர்த்தி, அவருக்கு ஆச்சார்யனாக இருந்த பேயாழ்வாரை "மாமான்" குறிப்பிலுணர்த்துவதாகக் கூறுவர்.

உம்மகள் தான் ஊமையோ? - ஒரு சமயம் பெரும்புலியூர் சென்ற தி.ஆழ்வார் அங்கு சில அந்தணர் வேதம் ஓதுவதைக் கண்டார். அவர்களோ, ஆழ்வார் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால், வேத பாராயணத்தை அவர் செவி மடுக்கலாகாது என்று ஓதுவதை நிறுத்தி விட்டனர்! ஆழ்வார் அங்கிருந்து நகர்ந்து சற்று தள்ளி அமர்ந்து கொண்டார்.

திரும்பவும் வேதம் ஓதுதலைத் தொடர எண்ணிய அந்தணர்களுக்கு, அவர்கள் விட்ட இடம் மறந்து போனது! ஆழ்வார் மௌனமாக, ஒரு கருப்பு எள்ளை எடுத்து அதை தன் நகத்தால் பிளந்து, அந்தணர் விட்ட வேதவாக்கியத்தின் (கிருஷ்ணா நாம வ்ரீஹீனாம் நகஹ் நிர்பின்னம்) பொருளை ஜாடையாக உணர்த்தினார்!

தி.ஆழ்வாரின் ஞானத்தையும் பெருமையும் உணர்ந்து வெட்கம் அடைந்த அந்தணர்கள் அவர் காலில் விழுந்து வணங்கி மன்னிக்கும்படி வேண்டினர். ஆக, "உம்மகள் தான் ஊமையோ?" என்ற சொல்லாடல் வாயிலாக கோதை நாச்சியார், வேதமந்திர வாக்கியத்தை செயல் மூலம் அந்தணருக்குணர்த்திய தி.ஆழ்வாரைத் தான் குறிப்பதாகச் சொல்வது பொருத்தமே!

செவிடோ? - அதே பெரும்புலியூரில், சில அந்தணர்கள் ஒரு யாகத்துக்குச் சென்ற ஆழ்வார் மீது அவமானப்படுத்தும் வகையில் சொற்களை வீசியபோது, தி.ஆழ்வார் அதைப் பொருட்படுத்தாமல் இருந்த நிகழ்வை ஆண்டாள் நினைவு கூர்வதாகச் சொல்லலாம்!

அனந்தலோ - ஆழ்வாரே, தன் நான்முகன் திருவந்தாதியில்

தொழில் எனக்குத்* தொல்லை மால்தன் நாமம் ஏத்த*
பொழுது எனக்கு மற்றதுவே போதும்*

தரித்திருந்தேன் ஆகவே* தாரா கணப்போர்*
விரித்துரைத்த* வெந்நாகத்துன்னை*
தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும்* வணங்கி வழிபட்டும்*
பூசித்தும் போக்கினேன் போது.


என்று அருளியவாறு, ஓர் அனந்தலைப் (ஆழ்ந்த துயில் - யோக நித்திரை) போல பகவத் விஷயங்கள் தவிர்த்து, மற்ற செயல்களில் பற்றெதுவும் இல்லாமல் இருந்ததைத் தான் ஆண்டாள் இப்படி நயமாகச் சொல்கிறாள் என்று கொள்ள வேண்டும்!

ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? - மற்ற ஆழ்வார்களை விடவும், பெருமான் மீது இவ்வாழ்வார் கொண்ட பேரன்பும், ஒரு சித்தரைப் போன்ற இவரது பற்றறு நிலையும் தனித்துவமானது! இதை "ஏமப்பெருந்துயில்" என்று சொல்வது பொருத்தமே! ஆழ்வார்,

பிதிரும் மனம் இலேன்* பிஞ்ஞகன் தன்னோடு,*
எதிர்வன் அவன் எனக்கு நேரான்*
அதிரும் கழற்கால மன்னனையே* கண்ணனையே*
நாளும் தொழக் காதல் பூண்டேன் தொழில்.


தி.ஆழ்வாரின் இந்த சொல்லாட்சி தனித்துவமானது! தி.ஆழ்வார் தனது ஆச்சார்யனான பேயாழ்வாரின் ஞான ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டதை "மந்திரப்பட்டாளோ" குறிப்பதாக சில பெரியோர் கூறுவர்.

மாமாயன் - ஆழ்வாருக்குப் பிடித்த சொல்லாடலை ஆண்டாள் பயன்படுத்தியிருப்பதை அவதானிக்க வேண்டும்! ஆழ்வார் தன் திருப்பாசுரங்களில், "மாயமென்ன மாயமே", "மாயமாய மாக்கினாய் உன் மாயமுற்றும் மாயமே" என்று மாயனின் மாயத்தை எண்ணி மாய்ந்திருக்கிறார் :)

அது போலவே, மாதவன், வைகுந்தன் என்ற திருநாமச் சொல்லாடல்களை தி.ஆழ்வாரின் பாசுரங்களில் காணலாம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

***490***
பென்சில் ஓவியம் நன்றி: தேசிகன்
ENGLISH VERSE TRANSLATION
Courtesy: SHOBA RAMASWAMY

9 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test ....

உயிரோடை said...

இன்று நிறைய‌ விச‌ய‌ங்க‌ள் கிடைக்க‌ பெற்றேன். ஒவ்வொரு அடியும் முத்தான‌து. சுட்டினால் பின்னூட்ட‌ம் உங்க‌ள் ப‌திவை அள‌விற்கு நீளும்.

//இதை விட அருமையாக ஒருவர் உறங்குவதை கவிநயத்துடன் (கோதை நாச்சியாரைத் தவிர!) யாராலும் சொல்ல இயலாது.//

அதே அதே

//ஞான தீபமாகிய "விளக்கு" என்ற பதத்தை ஆழ்வார் பாசுரங்களில் பல இடங்களில் காணலாம்.//


அருமை


//"தூபம் கமழ" என்பது ஞானம், அனுஷ்டானம் மற்றும் வைராக்கியம் என்ற மூன்று விஷயங்களை குறிப்பில் உணர்த்துவதாக //


அருமை அருமை

//வளர்ந்து கொண்டே இருக்கும் (அப்பெண்ணின்) பகவத் ஞானத் தன்மையைக் குறிக்கிறது!//


அருமையோ அருமை "க‌ண் வ‌ள‌ரும்" அழ‌கான‌ வாக்கிய‌ம் கோதை ஆண்டாள் வாழ்க‌


பெரியாழ்வார் பாசுர வ‌ரிகளை கோர்த்த‌தும் அருமை.

மாமாய‌ன் விள‌க்க‌ங்க‌ அழ‌கோ அழ‌கு. ம்ம்ம் ஆண்டாளுக்கும் அர‌ங்க‌னுக்கும் எம் ந‌ன்றிக‌ள். அதோடு என்றென்றும் அன்புட‌ன் பாலாவுக்கும் என் ந‌ன்றிக‌ள் அருமையான‌ சேவை

வல்லிசிம்ஹன் said...

அருமையான விளக்கங்கள். பாலா.
இது ஒரு ஆழ்வாரைக் குறிக்கும் பாசுரமாக அமையுமோ?

enRenRum-anbudan.BALA said...

மின்னல்,
//
மாமாய‌ன் விள‌க்க‌ங்க‌ அழ‌கோ அழ‌கு. ம்ம்ம் ஆண்டாளுக்கும் அர‌ங்க‌னுக்கும் எம்

ந‌ன்றிக‌ள். அதோடு என்றென்றும் அன்புட‌ன் பாலாவுக்கும் என் ந‌ன்றிக‌ள்

அருமையான‌ சேவை
//
திருப்பாவைப் பாசுரப் பதிவுகளே உங்களைப் போன்ற அடியார்களுக்கே

சமர்ப்பணம்!

enRenRum-anbudan.BALA said...

வல்லியம்மா,
//அருமையான விளக்கங்கள். பாலா.
இது ஒரு ஆழ்வாரைக் குறிக்கும் பாசுரமாக அமையுமோ?
//
நன்றி.
இது திருமழிசை பிரானை துயிலெழுப்பும் பாசுரம்.

ஆண்டாள், "மாமான் மகளே" என்று விளிப்பதற்குக் காரணம், நாச்சியாரும், திருமழிசையாரும் ஒரே குலத்தில் (பிருகு குலம்) அவதரித்தவர்கள் !!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆண்டாள், "மாமான் மகளே" என்று விளிப்பதற்குக் காரணம், நாச்சியாரும், திருமழிசையாரும் ஒரே குலத்தில் (பிருகு குலம்) அவதரித்தவர்கள் !!!//

:)
இது ஒரு ரசனைக்குச் சொன்னதாகவே எடுத்துக் கொள்கிறேன் பாலா!
ஒரே குலத்தில் பிறந்த காரணத்திற்காக எல்லாம் ஆண்டாள் அப்படி உரிமை கொண்டாடவில்லை!

மாமன் மகளே என்றால் திருமழிசையாழ்வார் கோதையின் மாமன் மகள்! அப்போ கோதையின் மாமன் யார்? நந்தகோபரா? அவரும் பிருகு குலமா? :)

enRenRum-anbudan.BALA said...

கண்ணபிரான்,
//இது ஒரு ரசனைக்குச் சொன்னதாகவே எடுத்துக் கொள்கிறேன் பாலா!
ஒரே குலத்தில் பிறந்த காரணத்திற்காக எல்லாம் ஆண்டாள் அப்படி உரிமை கொண்டாடவில்லை!

மாமன் மகளே என்றால் திருமழிசையாழ்வார் கோதையின் மாமன் மகள்! அப்போ கோதையின் மாமன்
யார்? நந்தகோபரா? அவரும் பிருகு குலமா? :)
//
இல்லை, ரசனைக்குச் சொல்லவில்லை!

கோதாஸ்துதி ஆண்டாளை திருமகள் அவதாரமாகத் தானே சொல்கிறது. புராணங்கள் மகாலஷ்மி
(திருமகள்) பிருகு குலத்தில் அவதரித்ததாகக் கூறுகிறது! அது போல, திருமழிசையாழ்வாரின் சரித்திரத்தில்
அவர் பிருகு குலத்தவர் என்று வருகிறது. அதனால், இரத்த சம்பந்தம் உண்டு என்று கொள்வதில்
தவறில்லை! அதற்காக lietral-ஆக மருமாள் என்று எடுத்துக் கொள்வது சரியாகாது.

கோதையின் மாமனார் (மாமன் அல்ல) நந்தகோபர் :) (அப்படியே மாமன் என்று கொண்டாலும்!)
விட்டால் திருமழிசையார் கோதை நாச்சியாருக்கு நாத்தனார் முறை வருகிறது என்று அடம் பிடிப்பீர்கள்
போலத் தெரிகிறதே ;-) நப்பின்னைக்கும் நாத்தனார் முறை தான் :)

திருமழிசையார் ஒரு ரிஷியின் மகனாக அவதரித்து, பின்னர் ஒரு வேடனால் (பிரம்பன் குலம்)
வளர்க்கப்பட்டவர். ஆண்டாள் ஒரு அந்தணரால் (விஷ்ணுசித்தர்) கண்டெடுக்கப்பட்டு தன்னை ஒரு
கோபியர் குலப்பெண்ணாக வரிந்து கொண்டவர்.

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

I have republished this post adding more information and pictures.

said...

>துயிலணை மேல் கண் வளரும்<

தூங்குபவர்களுக்கு எப்படி கண் வளரும்? கண் சிறுத்தல்லவா போகும்?

சரி? உறக்கத்தில் இல்லாதவர்க்கு எப்போது கண் வளரும்? ஒருவர் ஆச்சரியப்படும்போது ”கண் அகல விழித்தாள்”னு சொல்லுவோமில்லையா? அப்ப தூங்கும் போது ஏன் கண் வளருது? அவள் கண்ணில் அவள் ஆச்சரியப்படக்கூடிய பிம்பம் கனவில் வரும் போது! அப்படி கண் விரிய ஆச்சரியத்துடன் அவள் கண்களில் எந்த பிம்பம் வந்திருக்கமுடியும்?

அடிப்பயித்தியக்காரப்பெண்ணே கனவினில் உன் மாயக்கண்ணனைக் கண்டு கண் வளர அயர்ந்திருப்பவளே, எழுந்து கதவைதிற! ஆனால் மாயக்கண்ணன் கண்களில் இருக்கும் போது ஐம்புலனும் அவனுக்கல்லவா அடிமை? அவைதான் வேலையும் செய்யுமா? ஐம்புலன்களும் அல்லவா கண்ணன் அழகில் மயங்கித்திளைக்கிறார்கள்? காதும் வாயும் என்ன செய்யும் பாவம், அவையும் தான் என் செய்யும்.

மாமீ, வேறொருவர் கைபட்டால் திடுக்கிட்டு விழிப்பாள், நித்திரையை அதுவும் கண்ணன் கனவில் உள்ள நித்திரையை கலைத்தால் அவள் கோபத்தில் எழுந்து சபித்தும்விட்டால் தாங்குமா அல்லது அவள் பொற்கொடி போன்ற உடல்தான் அதிர்ந்துவிடாதா? பெருந்துயில் மந்திரப்பட்டவள் - hypnotized state ல் இருந்து ஒருவரை திடுமென விழிக்க வைக்கலாமோ? மெதுவாய் மனதுக்கு இதமான குரலில் பேசியல்லவோ எழுப்பவேண்டும். அதுவும் தாயென்றால் இன்னும் பதமாய் இனிமையான குரலாய் இருக்குமே? ஆனாலும் உன் பெண் பொல்லாதவள், அதனால் அவள் மனதுக்கு பிடித்த மாயக்கண்ணன் பெயர்களையே நவின்று (அதாவது அந்த நாமங்கள் கூட உரக்கக் கூறக்கூடாதாம், வாயிலிருந்து தவழவேண்டுமாம்) ஏலோரெம்பாவாய்!

;)

.:d:.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails